26 August 2013

உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை இராமேஸ்வரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்?

உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை
 இராமேஸ்வரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்? 



இராமேஸ்வரம் : 

               தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் இருப்பதாக மத்திய உளவுத் துறை மீண்டும் எச்சரித்ததை தொடர்ந்து கடலோர பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வழியாக தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறையினரிடம் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வந்தது. 

இதைத்தொடர்ந்து இராமேஸ்வரம் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாதி கள் ஊடுருவல் அபாயம் குறித்து மத்திய உளவுத்துறை நேற்று மீண்டும் எச்சரிக்கை தகவல் அனுப்பியது. இதனால்  தமிழக கடலோரப் பகுதியில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முக்கிய கோயில்கள் உட்பட பல இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வு துறையினர் சாதாரண உடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இராமேஸ்வரம் கோயிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  கோயில் பாதுகாப்பை  மத்திய பாதுகாப்பு படையினரிடம் முழுமையாக ஒப்படைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

 கோயிலை சுற்றிலும் நான்கு ரத வீதியில் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் மேற்கு ரதவீதி வழியாக அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கார் பார்க்கிங் வளாகத்திற்கு திருப்பி விடப்பட்டன. கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அனைத்து பக்தர்களும் சோதனை செய்யப்படுகின்றனர். செல்போன், கேமரா போன்ற பொருட்கள் கோயிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்திலுள்ள லாட்ஜ்களில் சரியான முகவரி தெரிவிக்காமல் கட்டாயப்படுத்தி அறை வாடகைக்கு கேட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கடற்கரை பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வைஸ் அட்மிரல் வருகை: 

             இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் ‘பருந்து‘ விமானப்படை தளத்திற்கு நேற்று வந்தார். கமாண்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். 

விமானப்படை தளத்தை ஆய்வு செய்து அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபின் இராமேஸ்வரம் கடலோர பகுதியை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர் மனைவியுடன் இராமேஸ்வரம் வந்தவர் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டார்.

0 Responses to “உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை இராமேஸ்வரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்? ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT