27 November 2013

இறுதி வெற்றி யாருக்கு? இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

இறுதி வெற்றி யாருக்கு?
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை


கான்பூர்: 

     தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில், இந்தியா  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று  மோதுகின்றன. கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா  வெஸ்ட் இண்டீஸ்  அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது. கொச்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட்  வித்தியாசத்தில் எளிதாக வென்று முன்னிலை பெற்றது. அடுத்து விசாகப்பட்டணத்தில் நடந்த 2வது போட்டியில், 289 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய  வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

இரு அணிகளும் 11 என சமநிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் இன்று பகல் ஆட்டமாக நடைபெறுகிறது. கடந்த போட்டியில் கடுமையான  பனிப்பொழிவு காரணமாக, இரண்டாவதாகப் பந்துவீசிய இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பவுலர்கள் பந்தை உறுதியாகப் பிடிக்க முடியாமல்  சிரமப்பட்டனர். பல கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டதும் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

அடுத்து கடினமான தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள இந்திய வீரர்கள், கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி  தன்னம்பிக்கையுடன் செல்வது அவசியமாகி உள்ளது. தவான், ரோகித், கோஹ்லி, டோனி ஆகியோர் அற்புதமான பார்மில் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள்  யுவராஜ், ரெய்னா, ஜடேஜா கணிசமாக ரன் குவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

புவனேஷ்வர், ஷமி, மோகித் வேகக் கூட்டணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அஷ்வின், ஜடேஜா சுழலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த உதவும். வெஸ்ட்  இண்டீசைக் காட்டிலும் எல்லா வகையிலும் பலமான இந்திய அணி, கான்பூரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என எதிர்பார்க்கலாம். அதே சமயம், டெஸ்ட்  தொடர் மற்றும் முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த படுதோல்வியால் துவண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ், விசாகப்பட்டனத்தில் கிடைத்த எதிர்பாராத  வெற்றியால் எழுச்சி கண்டுள்ளது.

அதிரடி வீரர் கேல் இல்லாத நிலையில் பாவெல், டேரன் பிராவோ, சிம்மன்ஸ், சம்மி ஆகியோர் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.  குறிப்பாக, சம்மியின் அதிரடி ஆட்டம் அந்த அணிக்கு புதிய தெம்பை அளித்துள்ளது. ராம்பால், சுனில், ஹோல்டர் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சும்  இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.

கான்பூர் போட்டி பகல் ஆட்டமாக நடப்பதால், பனிப்பொழிவு பற்றிய கவலை இல்லை. ஆனால், இந்த மைதானத்தில் நான்கு இடைவெளிக்குப் பிறகு சர்வதேச  போட்டி நடக்க உள்ளதால் ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாத நிலை உள்ளது. கடைசியாக 2009 நவம்பரில்  இலங்கை அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றது குறிப்பிடத்தக்கது.

காலையில் முதல் ஒரு மணி நேரம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், டாசில் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.  தொடரை வெல்ல இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியா: டோனி (கேப்டன்/கீப்பர்), ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர்  குமார், முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்காட், வினய் குமார், அம்பாதி ராயுடு, மோகித் ஷர்மா, அமித் மிஷ்ரா.

வெஸ்ட் இண்டீஸ்: வேய்ன் பிராவோ (கேப்டன்), ஜான்சன் சார்லஸ் (விக்கெட் கீப்பர்), மார்லன் சாமுவேல்ஸ், டேரன் பிராவோ, லெண்டில் சிம்மன்ஸ், நரசிங்  தியோநரைன், டேரன் சம்மி, ஜேசன் ஹோல்டர், சுனில் நரைன், ரவி ராம்பால், டினோ பெஸ்ட், வீராசாமி பெருமாள், கெய்ரன் பாவெல், தினேஷ் ராம்தின்.

0 Responses to “இறுதி வெற்றி யாருக்கு? இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT