8 December 2013

சத்தீஷ்காரில் 3–வது முறையாக பாரதீய ஜனதா ஆட்சி ராமன் சிங் மீண்டும் முதல்–மந்திரி ஆகிறார்

சத்தீஷ்காரில் 3–வது முறையாக பாரதீய ஜனதா ஆட்சி 
ராமன் சிங் மீண்டும் முதல்–மந்திரி ஆகிறார்




ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநிலத்தில் பாரதீய ஜனதா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. அங்கு தொடர்ந்து 3–வது முறையாக அக்கட்சி ஆட்சி அமைக்கிறது. ராமன் சிங் மீண்டும் முதல்–மந்திரி ஆகிறார்.

ஓட்டு எண்ணிக்கை

நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலம் சத்தீஷ்கார். அங்கு 90 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவம்பர் 11 மற்றும் 19–ந் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல்களில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்களையும் மீறி 75 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் பதிவாகின. மொத்தம் 986 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.ஓட்டு எண்ணிக்கை  காலை 8 மணிக்கு மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

 ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாரதீய ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. இதனால் இழுபறி நிலை நிலவியது.ஒரு கட்டத்தில் அங்கு காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் இறுதியில் பாரதீய ஜனதா அடுத்தடுத்த சுற்றுக்கள் ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலைக்கு வந்தது. முடிவில் பாரதீய ஜனதா மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 47 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தில் 2003, 2008, 2013 என தொடர்ந்து 3–வது முறையாக அக்கட்சி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

ராமன் சிங் வெற்றி


முதல்–மந்திரி ராமன் சிங், ராஜ்நந்த்கான் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அல்கா முதலியாரை 35 ஆயிரத்து 866 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் ராமன் சிங் தொடர்ந்து 3–வது முறையாக முதல்–மந்திரி ஆகிறார்.அதே நேரத்தில் அவரது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் நாங்கிராம் கன்வார், சந்திரசேகர் சாகு, ராம்விச்சார் நேத்தம், லதா உசென்டி, ஹேம்சந்த் யாதவ் ஆகியோரும் துணை சபாநாயகர் நாராயண் சந்தேலும் தோல்வியை தழுவி பாரதீய ஜனதா தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

அஜித் ஜோகி மகன் வெற்றி

காங்கிரஸ் முன்னாள் முதல்–மந்திரி அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோராவின் மகன் அருண் வெற்றி பெற்றனர்.நக்சலைட்டுகளுக்கு எதிரான சல்வா ஜூடும் என்ற இயக்கத்தை நடத்தி, அவர்களது தாக்குதலில் பலியான மகேந்திர கர்மாவின் மனைவி தேவ்தி கர்மா (காங்கிரஸ்), பாரதீய ஜனதா வேட்பாளரை வீழ்த்தி வெற்றி கண்டார்.

இறுதி நிலவரம்

மொத்த தொகுதிகள்– 90


பாரதீய ஜனதா – 47

காங்கிரஸ் – 40

பகுஜன் சமாஜ் – 2

சுயேச்சை – 1

0 Responses to “சத்தீஷ்காரில் 3–வது முறையாக பாரதீய ஜனதா ஆட்சி ராமன் சிங் மீண்டும் முதல்–மந்திரி ஆகிறார்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT