4 December 2013

வன்முறையை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு... ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : வாக்குப் பதிவு துவங்கியது

வன்முறையை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : வாக்குப் பதிவு துவங்கியது



சேலம்: 

          ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு சரியாக 8 மணிக்கு துவங்கியது. மொத்தம் உள்ள 290 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு துவங்கியது. இடைத்தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்-டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா, திமுக வேட்பாளர் வெ.மாறன் இடையே நேரடிப் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. ஏற்காடு இடைத்தேர்தலில் 9 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

 திமுக வேட்பாளர் மாறன் பூவனூரில் தனது வாக்கை பதிவு செய்தார். வேட்பாளர் மாறன் பூவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.


ஏற்காடு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் 2500க்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ பெருமாள் இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் மாறன், அதிமுக சார்பில் மறைந்த பெருமாளின் மனைவி சரோஜா உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சியினர் ஆகியோர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் மாலையுடன் ஏற்காட்டில் பிரசாரம் ஓய்ந்தது. இதனையடுத்து இன்று காலை 8 மணி வாக்குப்பதிவு துவங்கியது. வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. இதற்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு பணிக்கு வருவாய்த்துறை, ஆசிரியர்கள் உட்பட 4 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து சேலம் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு மின்னணு இயந்திரங்கள், வாக்குசாவடிக்கு தேவையான 86 பொருட்கள் நேற்று 290 வாக்குச்சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 36 மொபைல் டீம் எடுத்துச் சென்றது.


ஏத்தாப்பூர் அருகே நொய்யமலை வாக்குசாவடிக்கு 7 மின்னணு இயந்திரங்கள் எடுத்து சென்ற வாகனம் கவிழ்ந்தது. இதில் எஸ்.ஐ, ஏட்டு காயமடைந்தனர். மாற்று வாகனம் மூலம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரிசர்வ் சென்ட்ரல் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, ஆயுத படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, வெளி மாவட்ட, உள்ளூர் போலீசார் என ஆயுதம் ஏந்திய 2500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 290 வாக்குச்சாவடிகளுக்கும் உள்ளூர் போலீசார், சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச் சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, ஆன் லைன் மூலமாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேரடியாக வாக்குப்பதிவு மைய நடவடிக்கையை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களின் நடவடிக்கைகள் கலெக்டர் அலுவலகத்தில் ‘வெப்காஸ்டிங்‘ முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

எக்ஸ்ட்ரா தகவல்

2011 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளை தொடர்ந்து தற்போது ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

0 Responses to “வன்முறையை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு... ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : வாக்குப் பதிவு துவங்கியது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT