8 December 2013

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது 




புதுடெல்லி:

          டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? 4 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல்

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

இந்த 5 மாநிலங்களில் டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

காங்.–பா.ஜனதா நேரடி போட்டி

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 11 மற்றும் 19–ந்தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின.230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 25–ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கும் 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு ஆனது. பாரதீய ஜனதா அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. காங்கிரஸ் 229 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு கடந்த 1–ந்தேதி நடந்த தேர்தலில் 74 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின.70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 4–ந்தேதி நடந்த தேர்தலில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாயின.மேற்கண்ட 4 மாநிலங்களில் சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் நேரடி போட்டி நிலவியது. டெல்லியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது.

இன்று ஓட்டு எண்ணிக்கை

இந்த 4 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று பகல் 12 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது எந்தெந்த மாநிலங்களில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று தெரிந்து விடும்.

பாரதீய ஜனதாவுக்கு வாய்ப்பு


தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய இரு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்றும், மேலும் ராஜஸ்தானில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா வெற்றி பெறும் பட்சத்தில் தற்போதைய முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் 3–வது முறையாக மீண்டும் முதல்–மந்திரி ஆவார். இதேபோல் சத்தீஷ்காரில் அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் பட்சத்தில் ராமன்சிங் மீண்டும் முதல்–மந்திரியாக பதவி ஏற்பார்.ராஜஸ்தானில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றினால், வசுந்தராராஜே சிந்தியா முதல்–மந்திரி ஆவார்.

டெல்லியில் தொங்கு சட்டசபை?

டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 66 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அந்த கட்சி தனது கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலிதளத்துக்கு 4 தொகுதிகளை ஒதுக்கியது. வாக்குப்பதிவுக்கு பின்னர் நடந்த கருத்துக்கணிப்பில் டெல்லியில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்து உள்ளது.டெல்லியில் தொங்கு சட்டசபை ஏற்படும் பட்சத்தில் ஆம் ஆத்மி ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சிக்கக்கூடும் என்றும், இது தொடர்பாக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சிலர் தங்கள் கட்சி வேட்பாளர்களை அணுகியதாக தகவல் கிடைத்து இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா கூறி உள்ளார்.

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 25–ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 75 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இங்கு ஆளும் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. எதிர்க்கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 31 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான மிசோ மக்கள் மாநாடு கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மிசோரம் தேசியவாத கட்சி 38 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. 40 தொகுதிகளிலும் மொத்தம் 142 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த மாநிலத்தில் நாளை (திங்கட்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


0 Responses to “டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT