11 December 2013

சிங்கப்பூர் கலவரத்துக்கு காரணமான வாலிபர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்

சிங்கப்பூர் கலவரத்துக்கு காரணமான வாலிபர் 
புதுக்கோட்டையை சேர்ந்தவர்


ஆலங்குடி: 

     சிங்கப்பூரில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமான வாலிபர் புதுக்கோட்டையை சேர்ந்தவர். அவரது உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள் ளது. இதனால்  உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஓணங்குடி ஊராட்சி மறமடக்கியை சேர்ந்த சக்திவேல் மகன் குமாரவேல் (33). இவர் சிங்கப்பூரில் ஹெங் ஹப் சூன் என்ற நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8ம் தேதி இரவு சிங்கப்பூரில் உள்ள தேக்கா நகரத்துக்கு வந்து விட்டு பின்னர் தான் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் குமாரவேல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து கலவரம் வெடித்தது. 3 போலீஸ் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 10 போலீசார் உட்பட 18 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது, சிங்கப்பூரில் கலவரம் வெடித்ததால் குமாரவேல் இறந்தது பற்றி உறவினர்களுக்கு சிங்கப்பூர் அரசு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் விபத்தில் இறந்த குமாரவேலின் உடலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஓணங்குடி ஊராட்சி மறமடக்கிக்கு கொண்டு வரப்படுவதாக நேற்று காலை 10.30 மணிக்கு குமாரவேல் வீட்டிற்கு தபால் வந்தது.

அப்போது குமாரவேலின் தாய் ராஜலெட்சுமி, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மகன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு ராஜலெட்சுமி அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் குமாரவேலின் மரணச் செய்தி உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உறவினர்களும் திரண்டு வந்து கதறி அழுதனர்.

மகன் இறந்த செய்தி கேட்டு அழுது புலம்பிய ராஜலெட்சுமி, ‘‘ஏற்கனவே என் வீட்டுக்காரர் இறந்து விட்டார். மகள் மகேஸ்வரியை கீரனூரில் திருமணம் செய்து கொடுத்தேன். திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் பட்டப்பகலில் மகேஸ்வரியைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள். இப்போது, ஐந்து மாதங்களுக்குள் இரண்டு பிள்ளைகளையும் இழந்து விட்டேனே இனி என்ன செய்வேன்” என்று கதறியது அனைவரையும் கண்கலங்க செய்தது.

0 Responses to “சிங்கப்பூர் கலவரத்துக்கு காரணமான வாலிபர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT