11 October 2013

கல்லூரி முதல்வர் படுகொலை : சஸ்பெண்ட் செய்ததால் கொன்றோம் கைதான மாணவர்கள் வாக்குமூலம்

கல்லூரி முதல்வர் படுகொலை : 
சஸ்பெண்ட் செய்ததால் கொன்றோம்
கைதான மாணவர்கள் வாக்குமூலம் 


நெல்லை :  
               இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சுரேஷை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட டேனியஸ், பிச்சைகண்ணன், பிரபாகரன் ஆகிய 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் மூன்று பேரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தோம். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரி பஸ்சில் வந்த சில மாணவிகளை கிண்டல் செய்தோம். இதை சில மாணவர்கள் கண்டித்தனர். இதனால் அவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது.

கல்லூரி முதல்வர் சுரேஷ் எங்கள் மூவரையும் கண்டித்தார். இதற்கு காரணமான மாணவர்களுடன் கல்லூரி வளாகத்தில் மீண்டும் தகராறு செய்தோம். இதையடுத்து பிச்சை கண்ணனை முதல்வர் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தார். இரு நாட்களுக்கு முன்பு பிச்சைகண்ணன் உட்பட நாங்கள் மூன்று பேரும் முதல்வரை சந்தித்து சஸ்பெண்டை ரத்து செய்யும்படி வலியுறுத்தினோம்.

ஆனால் அவர் கண்டிப்புடன் பேசியதுடன், பிச்சை கண்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டால் எங்களையும் (டேனியஸ், பிரபாகரன்) சஸ்பெண்ட் செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதற்காக பாளை மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் அரிவாள், கத்தியை வாங்கினோம். காரில் வந்து இறங்கிய முதல்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பள்ளியில் நடந்த கொலை

சென்னை பிராட்வேயில் உள்ளது செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இப் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவன் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை (35) வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக் கொன்றான். புத்தகப் பையில் கத்தியை மறைத்து வைத்திருந்தான். தேர்வில் குறைந்த மார்க் போட்டு, பெற்றோரை வர சொன்னதால் ஆத்திரம் அடைந்து இக் கொலையை செய்தான். பள்ளியில் ஆசிரியரை மாணவன் கொலை செய்தது அதுதான் முதல் முறை. 2வது சம்பவமாக இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சுரேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



0 Responses to “ கல்லூரி முதல்வர் படுகொலை : சஸ்பெண்ட் செய்ததால் கொன்றோம் கைதான மாணவர்கள் வாக்குமூலம் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT