21 October 2013

தீபாவளிக்கு நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!

தீபாவளிக்கு நடக்கும் பகல் கொள்ளை 
அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!



சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். 

எந்த பண்டிக்கைக்கு போகிறார்களோ இல்லையோ, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகாதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்களின் முதல் சாய்ஸ் ரயில்தான். இதற்கு காரணம், கட்டணம் குறைவு, வசதிகள் அதிகம் என்பதுதான். தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. 

அடுத்ததாக அரசு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் ஒருமாதத்துக்கு முன்பாகவே பலரும் முன்பதிவு செய்கிறார்கள். சிறப்பு பஸ்களும் நிரம்பி வழிகின்றன. இவைகளில் டிக்கெட் கிடைக்காதவர்களின் ஒரே சாய்ஸ் ஆம்னி பஸ்கள் மட்டுமே. சென்னையில் ஒருநாளைக்கு சுமார் 750 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே தீபாவளி சமயத்தில் 1500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில், அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதால் ஆம்னி பஸ்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்தாண்டும் ரயில், அரசு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. 

மீதமிருப்பது ஆம்னி பஸ்கள் மட்டுமே. தீபாவளி நவ.2ம் தேதி என்பதால் பலரும் 30, 31ம் தேதிகளில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். அந்த நாட்களில் மதுரைக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் குறைந்த பட்ச டிக்கெட் கட்டணமே ரூ.1200. சாதாரண நாட்களில் ரூ.400 டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் அதே பஸ்களில் தீபாவளி சமயத்தில் ரூ.1200 கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது. சில பஸ்களில் ரூ.2000 வரை டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.  

சப்பை கட்டு கட்டும் அதிகாரிகள் 

                      தீபாவளி மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் இவர்கள் இஷ்டத்துக்கு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஆம்னி பஸ்களின் இந்த பகல் கொள்ளை ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் கண்துடைப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறை சார்பில் 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்படுகிறது. அவர்களும் பேருக்கு 5, 6 பஸ்கள் மீது அபராதம் விதித்து கடமையை முடித்துக் கொள்வதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். 

 ‘ஆன்லைனில் ஆம்னி பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக பல்வேறு இணையதளங்களும் உள்ளன. அவைகளில் சென்றால் தெளிவாக கட்டணங்கள் காட்டப்படுகின்றன.  

ஒவ்வொரு பஸ்களும் ரூ.1000க்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இது அதிகாரிகளுக்கு தெரியாதா...? ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்களை தவிர பெரும்பாலானவற்றில் டிக்கெட் வாங்கும் போது, ஏதோ ஒரு டிராவல்ஸ் பெயரில்தான் டிக்கெட் தருகிறார்கள். இது தினம் தினம் நடக்கும் முறைகேடு. இது அதிகாரிகளுக்கு தெரியாது என்றால் ஆச்சர்யம்தான். 

பண்டிகை நாட்களில் எல்லா ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் என்பதை சாதாரணமாக சென்று பார்த்தாலே தெரியும். ஆனால், அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி 2 பஸ்களை பறிமுதல் செய்துள்ளார்கள் என்ற செய்தியை பார்க்கும் போது சிரிப்பும் வேதனையும்தான் மிஞ்சுகிறது’ என்கின்றனர் மிடில் கிளாஸ் பயணிகள். இதே போல, பர்மிட் இல்லாத பல பஸ்களும் இயக்கப்படுகிறது. தனியார் வேன்களும் இயக்கப்படுகின்றன. இவைகளில் செல்லும் பயணிகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. 

இதுபோன்ற பஸ்களையும், வேன்களையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு கூட யாரும் இருப்பதில்லை. எனவே, போக்குவரத்து துறை இந்த விஷயத்தில் அதிக கவனம் எடுத்து முறையான ஆய்வு நடத்தி அதிக வசூல் செய்யும் ஆம்னி பஸ்கள் மீதும் பர்மிட் இல்லாத வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்கின்றனர் பயணிகள். அதிகாரிகள் கவனிப்பார்களா?
 
எவ்வளவு கட்டணம்? ஆன்லைனில் ஆம்னி பஸ்களின் கட்டண விபரம்...

ஆன்லைனில் ஆம்னி பஸ்களின் கட்டண விபரம்
செல்லுமிடம்
சாதாரண நாட்களில்
தீபாவளி சமயத்தில்

SL
SEMI SL
A/C
SL
SEMI SL
A/C
மதுரை
400
500
750
1200
1500
1995
கோவை
450
550
800
1100
1600
1999
திருச்செந்தூர்
600
700
850
870
1400
1400
திருநெல்வேலி
550
650
725
1300
1888
2499
தூத்துக்குடி
600
700
850
850
1370
1370
சேலம்
500
550
650
1100
1600
1999
நாகர்கோவில்
600
700
800
750
850
1100
திண்டுக்கல்
450
550
650
1000
1300
2000
இராமநாதபுரம்
450
650
700
650
1000
1300


விபரம் தெரிவிப்பது எப்படி? 

அதிகாரிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் பற்றி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலக தொலைபேசி எண் 044 - 24794709 க்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் போது ஆம்னி பஸ் பற்றி விபரங்கள் தெரிவிக்க வேண்டும்‘ என்கின்றனர். 

இதற்கு பயணிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் பெரும்பாலான பஸ்கள் எந்த டிராவல்ஸ், பர்மிட் உள்ளதா இல்லாததா என்பதே தெரியாது. பஸ்சில் ஒரு டிராவல்சின் பெயரும், டிக்கெட்டில் ஒரு பெயரும் இருக்கிறது. அப்படியே புகார் கொடுக்கலாம் என்றால் போனை அதிகாரிகள் யாரும் எடுப்பதில்லை. எடுத்தாலும், சரியான தகவலை சொல்லுங்கள் என்று கூறி வைத்து விடுகின்றனர். ஆம்னி பஸ் நிலையம் அருகிலேயே இருந்தும் கூட அவர்கள் நேரில் வர தயாராக இல்லை’ என்று புகார் கூறுகிறார்கள்.

0 Responses to “தீபாவளிக்கு நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT