24 November 2013

ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை அக்காவிடம் அத்துமீறியதால் சுத்தியலால் அடித்து கொன்றேன்

ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை அக்காவிடம் அத்துமீறியதால் சுத்தியலால் அடித்து கொன்றேன் 



தண்டையார்பேட்டை: 

           ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் பிடிபட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.எழும்பூரை சேர்ந்தவர் ஈஸ்வர் (55). ராயபுரம் எம்எஸ் கோயில் தெருவில் ஜவுளிக்கடை நடத்தினார். இந்த கடையில் 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். கடையை தினமும் 9.30 மணிக்கு ஈஸ்வர் திறப்பது வழக்கம். 10 மணிக்கு ஊழியர்கள் வருவார்கள்.நேற்று முன்தினம் காலை கடையில் வேலை செய்யும் காசிமேடு திடீர் நகரை சேர்ந்த மீனா (25) கடைக்கு வந்தார். உரிமையாளர் ஈஸ்வர் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருப்பதை பார்த்து அக்கம்பக்கத்து கடைக்காரர்களிடம் கூறினார். அவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ராயபுரம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சென்று உயிருக்கு போராடிய ஈஸ்வரை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வர் இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கொலையாளிகளை பிடிக்க ராயபுரம் உதவி கமிஷனர் சிவசங்கரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், மோகன்ராஜ், எஸ்ஐக்கள் இசக்கி பாண்டியன், சடகோபன், தீனன், மாணிக்கராஜ், காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடை ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது, மீனா காலையில் கடைக்கு வந்துவிட்டு, திடீரென மாயமானது தெரிந்தது.மீனா குறித்து ஈஸ்வரின் மகன் விமலிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீனாவை, ஈஸ்வர் திட்டியதாகவும், அதற்காக அவரது மாமா கோவிந்த் (30) என்பவர் ஈஸ்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து மீனாவை போலீசார் பிடித்து விசாரித்தனர்.அதில், தன்னிடம் ஈஸ்வர் தொட்டு தொட்டு பேசுவார். அது எனக்கு பிடிக்காது. அதனால், நான் என்ன வேலை செய்தாலும், அசிங்கமாக திட்டுவார்.

இதுபற்றி எனது மாமா கோவிந்த், தம்பி சதீஷிடம் (19) கூறி அழுதுள்ளேன் என கூறியுள்ளார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மீனாவின் தம்பி சதீஷை போலீசார் பிடித்தனர். ஈஸ்வர் இறந்தபோது காணாமல் போன அவரது செல்போனை சதீஷ் வைத்திருந்தது தெரிந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து சதீஷை காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் சதீஷ் கூறியதாவது: 

             எனது அக்கா மீனாவிடம் ஈஸ்வர் அத்துமீறி நடந்து கொண்டதோடு அசிங்கமாக திட்டியுள்ளார். அக்கா இதுபற்றி என்னிடம் கூறி அழுதார். அதனால், அவரை மிரட்டுவதற்காக வந்தேன். ஆனால், அவர் என்னையும், மீனாவையும் கேவலமாக திட்டினார்.

இதனால், ஆத்திரமடைந்த நான், கடையில் இருந்த சுத்தியலை எடுத்து ஈஸ்வரை அடித்தேன். அவர் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்ததும், நான் ஒன்றும் தெரியாததுபோல் சென்றுவிட்டேன்.

இவ்வாறு சதீஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியல் காசிமேடு துறைமுகம் அருகே கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருந்து. அதை போலீசார் கைப்பற்றினர்.இந்த கொலையில் மீனா, கோவிந்த், மேலும் சிலருக்கு சம்பந்தம் இருக்கும் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

0 Responses to “ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை அக்காவிடம் அத்துமீறியதால் சுத்தியலால் அடித்து கொன்றேன் ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT