9 December 2013

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி மீண்டும் தோல்வி தொடரையும் இழந்தது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்:
 இந்திய அணி மீண்டும் தோல்வி தொடரையும் இழந்தது 




டர்பன்:
டர்பனில் நேற்று நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

யுவராஜ்சிங் நீக்கம்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று நடந்தது. கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட படுதோல்வி எதிரொலியாக இந்திய அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. யுவராஜ்சிங், மொகித் ஷர்மா, புவனேஷ்வர்குமார் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரஹானே, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டனர். இதில் யுவராஜ்சிங் முதுகுபிடிப்பால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்க அணியில் ஒரே ஒரு மாற்றமாக வெய்ன் பார்னலுக்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த வெரோன் பிலாண்டர் இடம்பிடித்தார். முந்தைய நாள் பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், ஆட்டம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. இந்த முறையும் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

டி காக் மீண்டும் சதம்



இதையடுத்து குயின்டான் டி காக்கும், அம்லாவும் தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்சை தொடங்கினர். மழை மேகமான சீதோஷ்ண நிலையுடன், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக காணப்பட்ட போதிலும் நமது பவுலர்களால் எந்த தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. நங்கூரம் போல் நிலை கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்க ஜோடியை, எப்படி பிரிப்பது என்பது தெரியாமல் தடுமாறினார்கள். ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுத்து அணியின் ஸ்கோரை சீராக நகர்த்திய தென் ஆப்பிரிக்க வீரர்கள், லாவகமான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு ஓட விட்டனர்.

அபாரமாக ஆடிய டி காக் முதல் ஆட்டத்தை போலவே மீண்டும் சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு இது 3–வது சதமாகும். ஒரு மாதத்திற்குள் இந்த மூன்று சதங்களையும் அவர் புசித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்கோர் 194 ரன்களை (35.1 ஓவர்) எட்டிய போது, குயின்டான் டி காக் 106 ரன்களில் (118 பந்து, 9 பவுண்டரி) அஸ்வின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

முதல் விக்கெட்டுக்கு(194 ரன்) தென்ஆப்பிரிக்கா கூட்டணி திரட்டிய 2–வது அதிகபட்சமாக இது அமைந்தது. 2000–ம் ஆண்டு கொச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கிப்ஸ்–கிர்ஸ்டன் இணைந்து 235 ரன்கள் எடுத்ததே தென்ஆப்பிரிக்க தொடக்க ஜோடியின் சிறந்த ஸ்கோராக இந்த நாள் வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

280 ரன்கள் குவிப்பு

டி காக் வெளியேற்றத்திற்கு பிறகு வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் (3 ரன்) ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதனால் 300 ரன்களை எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவின் ரன்வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. மறுமுனையில் நிதானமாக ஆடிய அம்லா தனது 12–வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவுக்கு எதிராக அவரது 2–வது சதம் இதுவாகும். 100 ரன்கள் எடுத்த நிலையில் (117 பந்து, 8 பவுண்டரி) அம்லா, முகமது ஷமியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் சிக்கினார். அடுத்த சில விக்கெட்டுகளும் சீக்கிரம் சரிந்ததால், எதிரணியின் ரன்வேட்டை கடைசி கட்டத்தில் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் இறுதி ஓவரில் மட்டும் ஒட்டுமொத்தமாக கோட்டை விட்டு விட்டனர். 49–வது ஓவரை வீசிய உமேஷ்யாதவின் பந்து வீச்சில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உள்பட 20 ரன்கள் பறந்தது. இதன் உதவியுடன் தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 280 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

வீழ்ந்தது இந்தியா

அடுத்து 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் மறுபடியும் படுமோசமாக விளையாடி வெறுப்பேற்றி விட்டனர்.

ஸ்டெயின், சோட்சோப், மோர்னே மோர்கல், பிலாண்டர் ஆகிய மிரட்டல் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் நமது பேட்ஸ்மேன்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்களான ஷிகர் தவான் (0), விராட் கோலி (0), ரோகித் ஷர்மா (19 ரன்) முதல் 8 ஓவர்களுக்குள் நடையை கட்டினர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு இந்திய அணியின் நிலைமை கந்தலாகி விட்டது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா  36 ரன்கள் எடுத்தார்.

வெறும் 35.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 146 ரன்களில் சுருண்டு போனது. இதனால் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. சோட்சோப் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். சதம் அடித்த  குயின்டான் டி காக் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

தொடரும் சோகம்

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 6 ஒரு நாள் போட்டி கோப்பைகளை வென்ற பிறகு இந்திய அணி இழக்கும் முதல் ஒரு நாள் தொடர் இதுவாகும். அது மட்டுமின்றி தென்ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை எந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வசப்படுத்தியதில்லை என்ற இந்தியாவின் நீண்ட கால பரிதாபமும் தொடருகிறது.

இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 11–ந்தேதி செஞ்சுரியனில் நடக்கிறது.

ஸ்கோர்  போர்டு

தென்ஆப்பிரிக்கா


டி காக் (சி) ரோகித் (பி)    அஸ்வின்  106

அம்லா (சி) டோனி (பி)     முகமது ஷமி 100

டிவில்லியர்ஸ் (ஸ்டம்பிங்)    டோனி (பி) ஜடேஜா  3

டுமினி (ரன்–அவுட்)    26

மில்லர் எல்.பி.டபிள்யூ (பி)    முகமது ஷமி 0

காலிஸ் (பி) முகமது ஷமி    10

மெக்லரன் (நாட்–அவுட்)    12

பிலாண்டர் (நாட்–அவுட்)    14

எக்ஸ்டிரா    9

மொத்தம் (49 ஓவர்களில்    6 விக்கெட்டுக்கு) 280

விக்கெட் வீழ்ச்சி: 1–194, 2–199, 3–233, 4–234, 5–249, 6–255

பந்து வீச்சு விவரம்

உமேஷ் யாதவ்    6–0–45–0

முகமது ஷமி    8–0–48–3

இஷாந்த் ஷர்மா    7–0–38–0

அஸ்வின்    9–0–48–1

ரெய்னா    6–0–32–0

கோலி    3–0–17–0

ஜடேஜா    10–0–49–1

இந்தியா

ரோகித் ஷர்மா (சி) அம்லா     (பி) சோட்சோப்  19

தவான் (சி) டுமினி (பி)    ஸ்டெயின்  0

கோலி (சி) டி காக் (பி)   சோட்சோப்  0

ரஹானே (சி) டி காக் (பி)    மோர்கல்  8

ரெய்னா (சி) மில்லர் (பி)    மோர்கல்  36

டோனி (சி) டி காக் (பி)    பிலாண்டர் 19

ஜடேஜா (சி) டிவில்லியர்ஸ்    (பி) சோட்சோப்  26

அஸ்வின் (சி) டி காக் (பி)    ஸ்டெயின் 15

முகமது ஷமி (பி)    சோட்சோப் 8

உமேஷ் யாதவ் (பி)    ஸ்டெயின் 1

இஷாந்த் ஷர்மா    (நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா 14

மொத்தம் (35.1 ஓவர்களில் ஆல்–அவுட்) 146

விக்கெட் வீழ்ச்சி:– 1–10, 2–16, 3–29, 4–34, 5–74, 6–95, 7–133, 8–145, 9–146

பந்து வீச்சு விவரம்

ஸ்டெயின்    7–1–17–3

சோட்சோப்    7.1–0–25–4

மோர்னே மோர்கல்    6–0–34–2

பிலாண்டர்    6–1–20–1

டுமினி    5–0–20–0

மெக்லரன்    4–0–25–0

0 Responses to “தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி மீண்டும் தோல்வி தொடரையும் இழந்தது”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT