15 November 2013

புஜாரா, ரோஹித் ஷர்மா, சச்சின் அபாரம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்

புஜாரா, ரோஹித் ஷர்மா, சச்சின் அபாரம்
இந்திய அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்



மும்பை: 

                   இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, புஜாரா ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். 

தனது கடைசி டெஸட்போட்டியில் நட்சத்திர வீரர் சச்சின் 74 ரன்கள் குவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இது சச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் என்பதுடன், இந்த போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்டம் ஆரம்பம் ஆனது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 55.2 ஓவரில் 182 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சில் ஓஜா 5, அஸ்வின் 3, புவனேஷ்வர், ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதன்பின், இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் 33, விஜய் 43 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கிடையே களமிறங்கினார் சச்சின். அவர் சந்தித்த ஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க, வாங்கடே மைதானமே அதிர்ந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது.

புஜாரா 34 ரன், சச்சின் 38 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினர். சச்சின் 91 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது அவருக்கு 68வது அரை சதமாகும். இந்நிலையில், டியோநைரன் பந்தை அடித்து ஆடிய போது, சமி கேட்ச் பிடிக்க, சச்சின் 74 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

இந்திய அணியில் புஜாரா மற்றும் ரோஹித் ஷர்மா சதம் அடித்து அசத்தினர். இறுதியில் இந்தியா முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்சிஸ் ஸ்கோரை விட 313 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.

0 Responses to “புஜாரா, ரோஹித் ஷர்மா, சச்சின் அபாரம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT